"உண்ட வீட்டுக்கு இரண்டகம்" வீணாகிப் போன இராஜதந்திரம்..!
சென்னை வேப்பேரியில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் அந்நிறுவனத்தின் ஊழியரே போலி அடையாள அட்டைகளைத் தயார் செய்து கூட்டாளிகளுக்குக் கொடுத்து, திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள குளோபல் டெக் ஐடி நிறுவனத்தில் கடந்த 7-ஆம் தேதி ஊழியர்கள் போல ஐடி கார்டுகளை அணிந்து சென்று மேலாளர் அறையில் இருந்த லாக்கரை திறந்து திருட முயன்ற கும்பல் அதில் பணம் ஏதும் இல்லாததால் அங்கிருந்த வெள்ளியினாலான விநாயகர் சிலை மற்றும் பொருட்களை திருடிச் சென்றனர். இது தொடர்பான புகாரின் படி கீழ்பாக்கம் துணை ஆணையர் தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து, திருடர்களைத் தேடி வந்தனர்.
செல்போன் நெட்வொர்க் சிக்னலை வைத்து கோயம்புத்தூரில் பதுங்கியிருந்த விஜயகுமார் மற்றும் விஷ்ணு ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அந்நிறுவனத்தின் ஊழியரே இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. குளோபல் டெக் நிறுவனத்தில் நிர்வாகப் பிரிவில் மேலாளராகப் பணி புரிந்த ஜாகிர் அலி என்ற நபர், அலுவலகத்தில் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுப்பதற்காக வைத்திருந்த 25 லட்சம் ரூபாய் பணத்தையும் வெள்ளி விநாயகர் சிலையையும் திருட திட்டமிட்டது தெரியவந்தது.
ஜாகீர் அலி நிர்வாகப் பிரிவு மேலாளர் என்பதால் எந்தந்த நாட்களில் அலுவலக லாக்கரில் பணம் இருக்கும் எவ்வளவு பணம் இருக்கும் என்பது நன்றாகவே தெரியும் என்று கூறப்படுகிறது. எனவே தனக்கு பழக்கமான கோவையைச் சேர்ந்த விஜயகுமார் மற்றும் விஷ்ணு என்ற இருவரிடமும் பேசி அதற்காக நூதன முறையில் பல திட்டங்களைத் தீட்டி உள்ளான். நிறுவனத்தின் லோகோவை பயன்படுத்தி அடையாள அட்டைகளைத் தயார் செய்து, கூட்டாளிகளுக்குக் கொடுத்துள்ளான்.
நிறுவனத்துக்குள் செல்வதற்காக உபயோகப்படுத்தாமல் வைத்திருந்த அக்ஸெஸ் கார்டு எனப்படும் மின்னணு அட்டைகளையும் கூட்டாளிகளிடம் ஜாகீர் அலி கொடுத்துள்ளான். திருடர்கள் இருவரும் சம்பவம் நடந்த அன்று இரவு ஒரு 7 மணி அளவில் நிறுவனத்திற்கு வந்துள்ளனர். மற்ற ஊழியர்கள் எல்லாம் செல்லும் வரை காத்திருந்து, ஜாகிர் அலி உதவியுடன் மேலாளர் அறைக்குள் சென்று பார்த்த போது பணம் எதுவுமில்லை. இதனால் அங்கிருந்த வெள்ளியிலான விநாயகர் சிலை, சில பொருட்களை மட்டுமே திருடிக் கொண்டு தப்பியுள்ளனர்.
போலீசிடமிருந்து தப்பிக்க, போலி பதிவெண் பொருத்திய காரில் அங்கிருந்து தப்பியதும் தெரியவந்தது. திருட்டு நடந்த அடுத்த நாள் எதுவும் நடக்காததுபோல் ஜாகீர் அலி ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு வேறு நிறுவனத்தில் சென்று சேர்ந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Comments